அரியது கேட்கின் வரிவடிவேலோய்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: கந்தன் கருணை
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே
பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே
இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே
என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
