ஓடி விளையாடு பாப்பா
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
அச்சம் தவிர் ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி ஈகைத் திறன்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகமும் புகழும்
தவமும் திறனும் தனமும் கனமும்
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
